Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG கடைசி ஓவரில் சொதப்பிய கோலி..! திருப்புமுனையை ஏற்படுத்திய ஜாக் லீச்

3வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் ஜாக் லீச்.
 

virat kohli lost his wicket in last over of first day in third test
Author
Ahmedabad, First Published Feb 24, 2021, 10:25 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி மட்டுமே அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 84 பந்தில் 53 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினின் சுழலில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அக்ஸர் படேல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, 112 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி.

முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசனிலேயே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது செசனை விக்கெட்டே இல்லாமல் முடித்தது. 3வது செசனிலும் ரோஹித்தும் கில்லும் சிறப்பாகவே ஆடினர். 49 பந்துகள் களத்தில் ஆடிவிட்ட கில், ஆர்ச்சர் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பவுன்ஸராக வீசிய பந்தை கில் புல் ஷாட் ஆட முயல, அது டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. 50 பந்தில் 11 ரன்கள் அடித்து கில் ஆட்டமிழந்தார்.

புஜாரா லீச்சின் பந்தில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, இந்திய அணி  34 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். ரோஹித் - கோலி இடையே பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனதால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமானது.

சிறபபாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, கோலியும் சிறபாக ஆடிக்கொண்டிருந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 64 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கேப்டன் கோலி ஜாக் லீச்சின் பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் விக்கெட்டை இழக்காமல் இன்றைய ஆட்டத்தை முடித்திருந்தால், நாளை பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்கலாம். ஆனால் தேவையில்லாத ஷாட்டுக்கு முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார் கோலி. இதையடுத்து ரோஹித்துடன் ரஹானே ஜோடி சேர, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios