கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தர்மாசாலா போட்டி மழையால் ரத்தானது. அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தலால் எஞ்சிய 2 போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். 

கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால், ஐபிஎல் எப்போது நடத்தப்படும் என்பதே தெரியவில்லை. ஐபிஎல் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு வரும் என கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலியும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநர் க்ரேம் ஸ்மித்தும் ஏற்கனவே பேசியதை போலவே, 3 டி20 போட்டிகள் கொண்ட சிறிய தொடரில் ஆட இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா வரும் என கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

ஆனால் இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவுதான். ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலேயே பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவுதான். ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தமாகவே கொரோனாவிற்கு 3000க்கும் குறைவானோர் தான் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.