Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: ராகுல் டிராவிட், கங்குலி ஆகிய ஜாம்பவான்களின் சாதனைகளை காலி செய்யப்போகும் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருபெரும் ஜாம்பவான்களின் பேட்டிங் ரெக்கார்டை தகர்க்கப்போகிறார் விராட் கோலி.
 

virat kohli is going to surpass rahul dravid and sourav ganguly record in odi cricket
Author
Paarl, First Published Jan 18, 2022, 5:42 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங்கின் (71 சதங்கள்) சத சாதனையை சமன் செய்துவிடுவார்; இன்னும் 2 சதங்கள் அடித்தால் பாண்டிங்கை முந்திவிடுவார்.

ஆனால் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் அடிக்கமுடியாமல் திணறிவருகிறார். கடைசியாக 2019 நவம்பரில் அடித்த சதம் தான். அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை விராட் கோலி. 2 ஆண்டுகளாக 21 முறை சதத்தை நோக்கிச்சென்று தவறவிட்டுள்ளார் கோலி. 

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலிக்கு இனிமேல் கேப்டன்சி அழுத்தம் கிடையாது. எனவே அவர் முழுக்க முழுக்க அவரது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தலாம். எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சதமடிப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் டெஸ்ட் தொடரில் கோலி சதமடிக்கவில்லை.

எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜனவரி 19(நாளை), 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகளில் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஒருநாள் தொடரில் ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி ஆகிய ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்க்க விராட் கோலிக்கு வாய்ப்பிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1287 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 8வது இடத்திலும், இந்திய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்திலும் உள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் (2001 ரன்கள்), சௌரவ் கங்குலி (1313 ரன்கள்), ராகுல் டிராவிட் (1309 ரன்கள்) ஆகிய மூவரும் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களாக திகழ்கின்றனர். 1287 ரன்களை இதுவரை குவித்துள்ள கோலி, இன்னும் 26 ரன்கள் அடித்தால், ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த 2ம் இடத்தை பிடித்துவிடுவார்.

தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 887 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, இன்னும் 171 ரன்கள் அடித்தால், தென்னாப்பிரிக்காவில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் (930 ரன்கள்) மற்றும் சௌரவ் கங்குலி (1048 ரன்கள்) ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்தை பிடித்துவிடுவார்.  சச்சின் டெண்டுல்கர் (1453 ரன்கள்) மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு(1423 ரன்கள்) அடுத்த 3ம் இடத்தை பிடிப்பார் கோலி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios