விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சாதனைகளை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 279 ரன்கள் அடித்தது. மழை குறுக்கீட்டால் டி.எல்.எஸ் முறைப்படி 46 ஓவர்களில் 270 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 42 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 42வது சதத்தை பதிவு செய்த கோலி, 120 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்த போட்டியில் சதமடித்த கோலி, பல சாதனைகளை முறியடித்துள்ளார். அந்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம். 

1. ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத்திடமிருந்து(1930 ரன்கள்) இந்த சாதனையை நேற்றைய போட்டியில் தான் முறியடித்தார் கோலி. நேற்றைய போட்டியில் அடித்த ரன்களுடன் சேர்த்து கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2032 ரன்களை குவித்துள்ளார்.

2. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை ரோஹித் சர்மா வசமிருந்தது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 37 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 34 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து ரோஹித்தின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. 

3. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில், கங்குலியை பின்னுக்குத்தள்ளி 8வது இடத்தை பிடித்தார் கோலி. கங்குலி ஒருநாள் கிரிக்கெட்டில் 11,363 ரன்களை குவித்துள்ளார். கோலி 11,406 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் கங்குலியை பின்னுக்குத்தள்ளிவிட்டார். சச்சின், சங்கக்கரா, பாண்டிங், ஜெயசூரியா, ஜெயவர்தனே, இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார். சச்சினை தவிர மற்ற அனைவரையும் கோலி விரைவில் முந்திவிடுவார். 

4. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி. 

5. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். ஒரு கேப்டனாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 6 சதங்களை விளாசியுள்ளார் விராட் கோலி. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்து, இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.

6. அதேபோல ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து கோலி தான் உள்ளார். சச்சின் தனது ஒருநாள் கெரியரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 9 சதங்களையும் இலங்கைக்கு எதிராக 8 சதங்களையும் விளாசியுள்ளார். விராட் கோலி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று அடித்தது 8வது சதம். சச்சினாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 மற்றும் இலங்கைக்கு எதிராக 8 சதங்கள்தான் அதிகபட்சமாக அடித்துள்ளார். ஆனால் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மட்டுமல்ல, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் ஏற்கனவே 8 சதங்களை விளாசியுள்ளார். நேற்றைய போட்டியில் சதமடித்ததன்மூலம் இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸையும் இணைத்து கொண்டுள்ளார் கோலி.