டி20 உலக கோப்பை: ஷர்ஷல் படேல் பவுலிங்கில் அடிவாங்கி மைதானத்தில் மண்டியிட்ட கோலி.! அரையிறுதிக்கு முன் பதற்றம்
டி20 உலக கோப்பை அரையிறுதியில் நாளை இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், பயிற்சியின்போது கோலிக்கு காயம் ஏற்படும் அபாயம் இருந்தது. நல்லவேளையாக எந்த பிரச்னையுமின்றி அவர் பயிற்சியை தொடர்ந்தார்.
டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் அரையிறுதி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது.
நாளை(நவம்பர் 10) அடிலெய்டில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டி20 உலக கோப்பைக்கு முன் பும்ரா, ஜடேஜா ஆகிய பெரிய வீரர்கள் காயமடைந்தனர். அதனால் அவர்கள் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாமல் போனது. பும்ரா, ஜடேஜாவின் இழப்பு இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தளவிற்கு பாதிப்பாக அமையாதவகையில், இந்திய வீரர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடிலெய்டில் நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், நேற்று ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியில் அடிபட்டது. இதையடுத்து களத்தை விட்டு வெளியேறினார் ரோஹித் சர்மா. அவரை ஃபிசியோ பரிசோதித்தார். ரோஹித் களத்தை விட்டு வெளியேறியதால் காயமாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் காயம் பெரிது இல்லை என்பதால், மீண்டும் களத்திற்கு வந்து பயிற்சியை தொடர்ந்தார் ரோஹித். மேலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரையிறுதி போட்டியில் கண்டிப்பாக ஆடுவேன் என்றார் ரோஹித். அதன்பின்னர் தான் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில், இன்று பயிற்சியின்போது விராட் கோலிக்கு அடிபட்டது. வலைப்பயிற்சியில் கோலி பேட்டிங் ஆடியபோது, ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் உடம்பில் அடிவாங்கினார். அடியின் வலி தாங்கமுடியாமல் மைதானத்தில் மண்டியிட்டார் கோலி. எனவே பெரிய அடியாக இருக்குமோ என்று அஞ்சப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், களத்தைவிட்டுக்கூட வெளியேறாமல் பயிற்சியை தொடர்ந்தார் கோலி. அதனால் கோலிக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
விராட் கோலி இந்த உலக கோப்பையில் அபாரமாக ஆடிவருகிறார். இந்திய அணி அரையிறுதியில் வெற்றி பெற்று, ஃபைனலிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்லவேண்டுமென்றால் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங் ஆடுவது முக்கியம். ஏனெனில் அவர்கள் இருவரும் தான் இந்த உலக கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகின்றனர். விராட் கோலி இந்த உலக கோப்பையில் 5 சூப்பர் 12 சுற்று போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 246 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். அதே ஃபார்மை நாக் அவுட் போட்டிகளிலும் தொடர்ந்து இந்திய அணிக்கு கோலி உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.