டி20 உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்துக்கு மரண அடி! காயத்தால் விலகும் அதிரடி வீரர்
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவிட் மலான் காயத்தால் அரையிறுதி போட்டியில் ஆடமாட்டார் என்றும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
க்ரூப் 1ல் முதலிடம் பிடித்த நியூசிலாந்து மற்றும் க்ரூப் 2ல் 2ம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கிறது. க்ரூப் 2ல் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் க்ரூப் 1ல் 2ம் இடம்பிடித்த இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி வரும் 10ம் தேதி அடிலெய்டிலும் நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையே அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டி கடும் போட்டியாக இருக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை அடிலெய்டில் தான் ஆடியது என்பதால் அந்த கண்டிஷனும், ஆடுகளத்தின் தன்மையும் இந்திய அணிக்கு நன்றாக தெரியும். அது இந்திய அணிக்கு கூடுதல் பலம். மேலும் அடிலெய்ட் விராட் கோலிக்கு மிகவும் பிடித்த ஆடுகளம். அடிலெய்டில் ஆடினாலே கோலி அடித்து நொறுக்கிவிடுவார். அது இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கக்கூடிய விஷயம்.
இந்தியாவிற்கு இதுமாதிரியான பலங்கள் இருக்கும் நிலையில், இங்கிலாந்துக்கு பலம் இல்லையென்றாலும் பரவாயில்லை; கூடுதலாக பலவீனம் தான் உருவாகியுள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்தபோது இங்கிலாந்து அதிரடி வீரர் டேவிட் மலான் காயமடைந்து களத்தைவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இலக்கை விரட்டும்போது மலான் பேட்டிங் ஆடவில்லை.
அவரது காயம் குணமடையாததால் வரும் 10ம்தேதி இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் ஆடமாட்டார் என்று தெரிகிறது. டி20 உலக கோப்பையிலிருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மலான் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடாதது அந்த அணிக்கு பின்னடைவுதான். ஆனால், பேட்ஸ்மேன் ஃபிலிப் சால்ட், ஆல்ரவுண்டரிகள் டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான் ஆகிய வீரர்கள் அணியில் இருப்பதால் அவர்களில் ஒருவரை இங்கிலாந்து அணி ஆடவைக்கும்.