BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ
2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் தனது விக்கெட்டை கொண்டாடிய வங்கதேச வீரர்கள் மீது விராட் கோலி கோபமடைந்த வீடியோ வைரலாகிவருகிறது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 227 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி ரிஷப் பண்ட் (93) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின்(87) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் அடித்தது.
87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 145 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணி 37 ரன்களுக்கே ராகுல், கில், புஜாரா, கோலி ஆகிய நால்வரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 3ம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 100 ரன்கள் தேவை.
எளிய இலக்கை விரட்டும்போது இந்திய அணி விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், தானும் ஒரு ரன்னில் அவுட்டான விரக்தியில் வங்கதேச வீரர்கள் மீது பாய்ந்தார் விராட் கோலி. மெஹிடி ஹசனின் பந்தை ஃப்ரண்ட் ஃபூட்டில் தடுப்பாட்டம் ஆட கோலி முயல, அது ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் நின்ற மோமினுல் ஹக் அந்த கேட்ச்சை அருமையாக பிடித்தார். அதற்குமுன் கேஎல் ராகுலின் கேட்ச்சை கோட்டைவிட்ட மோமினுல் ஹக், பெரிய வீரரான கோலியின் கேட்ச்சை பிடித்த மகிழ்ச்சியில் பெரிதாக கொண்டாடினார். அவருடன் வங்கதேச வீரர்களும் பெருமகிழ்ச்சியுடன் கோலியின் விக்கெட்டை கொண்டாடினர்.
முக்கியமான கட்டத்தில் தனது விக்கெட்டை இழந்த விரக்தியில் இருந்த விராட் கோலி, வங்கதேச வீரர்களின் கொண்டாட்டத்தால் கடுப்படைந்து அவர்களை நோக்கி கோபத்தில் சில வார்த்தைகளை பேச, ஷகிப் அல் ஹசன் உடனடியாக வந்து கோலியை சமாதானப்படுத்தினார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.