வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் படைத்துள்ளது. 318 ரன்கள் வித்தியாசம் என்பது சாதாரண வெற்றி அல்ல; கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி. 

இந்த போட்டிக்கான அணி தேர்வு கடும் சர்ச்சைக்குள்ளானது. ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்த்தும் கூட, ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் புறக்கணிக்கப்பட்டது தவறு என்றும் அவரை கண்டிப்பாக அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் கருத்து கூறினர். ஆனால், அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை பதித்தார்.

 

கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அந்த போட்டியில் ரோஹித்தைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். ரோஹித் மாதிரியான ஒரு வீரரை அணியில் எடுத்துவிட்டு ஆடும் லெவனில் எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம். எனவே அவரை கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்று, இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் ரோஹித் சேர்க்கப்படவில்லை. ரோஹித்தின் புறக்கணிப்பு பல முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியையும் கடுப்பையுமே ஏற்படுத்தியது. 

ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். ரோஹித் புறக்கணிப்பிற்கு பிறகு, மற்றொரு முன்னாள் கேப்டனான அசாருதீனும் அதிருப்தி தெரிவித்திருந்தார். 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரிக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்பது போட்டிக்கு முன்பாகவே கோலியின் பேச்சின் மூலம் தெரிந்துவிட்டது. கோலியின் கருத்து குறித்த அந்த செய்தியை நமது ஏசியாநெட் தளத்தில் வெளியிட்டிருந்தோம். ரோஹித் - விஹாரி.. இருவரில் யாருக்கு அணியில் வாய்ப்பு..? க்ளூ கொடுத்த கோலி

ரோஹித்தின் புறக்கணிப்பு சர்ச்சையான நிலையில், அதுகுறித்து வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, டீம் காம்பினேஷன் தான் முக்கியம். விஹாரி தரமான பார்ட் டைம் பவுலர். அவர் இடையில் சில ஓவர்களை வீசுவார். எனவே அனைவரும் ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் தான் இந்த முடிவை எடுத்தோம். ஆடும் லெவன் குறித்த விமர்சனங்கள் எழுவது வழக்கம் தான். ஆனால் அணிக்கான தேவையும் அணியின் நலனும் தான் முக்கியம் என்று கோலி தெரிவித்தார்.