வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 பவுலர்களுடன் களமிறங்கும். மயன்க் அகர்வால், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய 6 பேர் ஆடுவது உறுதி. 7வது பேட்ஸ்மேனாக ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் எடுக்கப்படுவார். 

அது யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதால் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். அவர் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருப்பதால் அவர்தான் இந்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெஸ்ட் அணியில் ரோஹித்தை எடுத்துவிட்டு, ஆடும் லெவனில் புறக்கணிக்கப்பட வாய்ப்பில்லை. அதேநேரத்தில் ஹனுமா விஹாரி இதுவரை இந்திய அணிக்காக ஆடிய போட்டிகளில் சிறப்பாக ஆடியதோடு, இந்தியா ஏ அணியிலும் பயிற்சி போட்டியிலும் சிறப்பாகவே ஆடியுள்ளார். எனவே இருவரில் யாரை எடுப்பது என்பது அணி நிர்வாகத்திற்கு நெருக்கடியளிக்கக்கூடிய விஷயம் தான். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித்தை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, அணிக்கு தேவைப்படும் காம்பினேஷனை பொறுத்ததுதான் வீரர்கள் தேர்வு. விஹாரி இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். நெருக்கடி அதிகமான 2 சுற்றுப்பயணங்களில் சிறப்பாக ஆடியுள்ளார் விஹாரி. அதேபோல, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ரோஹித் சிறப்பாக ஆடினார். விஹாரி சில ஓவர்கள் வீசுவார்; சிறந்த வீரர் அவர். அதேநேரத்தில் ரோஹித்தின் பேட்டிங் தரத்தை நாம் கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்துவருகிறோம். எனவே ஆடும் லெவனில் வாய்ப்பு என்பது, அணிக்கு தேவையான காம்பினேஷனை பொறுத்தது என்றார். 

விஹாரி பவுலிங்கிலும் பங்களிப்பு செய்வார் என்று கோலி கூறியதால், விஹாரிக்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக உள்ளதைத்தான் அவரது கூற்று பறைசாற்றுகிறது.