இந்திய அணியில் தோனிக்கு பிறகு கேப்டன்சியை பொறுப்பை ஏற்ற விராட் கோலி, அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் உள்ளன. அதுகுறித்த விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. எனினும் தன்னம்பிக்கையுடனும் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆலோசனையுடனும் அணியை திறம்பட சிறப்பாக வழிநடத்துகிறார். 

விராட் கோலியின் கேப்டன்சியில் உலக கோப்பையில் ஆடிவரும் இந்திய அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்த பிரதான அணிகளில் ஒன்று. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் உலக கோப்பையில் ஆடுகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அடைந்த 50வது வெற்றி. கோலி தலைமையில் இந்திய அணி 69 போட்டிகளில்(தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிவரை) ஆடி 50ல் வெற்றி பெற்றுள்ளது. 

இதன்மூலம் 50 ஒருநாள் வெற்றிகளை விரைவில் கடந்த கேப்டன்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸை பின்னுக்கு தள்ளி மூன்றாமிடத்தை பிடித்தார் விராட் கோலி. விவியன் ரிச்சர்ட்ஸ் 70வது போட்டியில் தான் 50வது வெற்றி என்ற மைல்கல்லை எட்டினார். ஆனால் கோலி 69வது போட்டியில் 50வது வெற்றி என்ற மைல்கல்லை எட்டினார். 

இந்த பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்டும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பகிர்ந்துள்ளனர். இருவரும் 63வது போட்டியில் 50வது வெற்றியை பெற்றனர். தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரோன்ஜ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

ஒரு கேப்டனாக ரிக்கி பாண்டிங்கை அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய பாண்டிங், 230 போட்டிகளில் கேப்டனாக இருந்து 165 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். அந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியாத வலுவான அணியாக வைத்திருந்தார் பாண்டிங். அந்த பத்தாண்டுகளுக்கு இடையே நடந்த 3 உலக கோப்பைகளில் இரண்டை ஆஸ்திரேலிய அணி வென்றது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் பாண்டிங். பாண்டிங்கின் கேப்டன்சி ரெக்கார்டை முந்துவது இனிவரும் எந்த சர்வதேச கேப்டனுக்கும் எளிதான காரியம் அல்ல. வெற்றி சதவிகிதத்திலும் அவர் தான் டாப் கேப்டன்.