இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது. அந்த அணியின் கேப்டன் குயிண்டன் டி காக் அரைசதம் அடித்தார். டெம்பா பவுமா 49 ரன்கள் அடித்தார். அவர்களை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. டேவிட் மில்லர், வாண்டெர் டசன் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி 149 ரன்கள் மட்டுமே அடித்தது. 

150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் கேப்டன் கோலியும் தவானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். தவான் 40 ரன்களில் அவுட்டாக, வழக்கம்போலவே அபாரமாக ஆடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்தார். 

தவானின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், வெறும் 4 ரன்களில் அவுட்டாகி இந்த முறையும் ஏமாற்றினார். இதையடுத்து கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் சேர்ந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். 19வது ஓவரில் இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 

கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை குவித்த கோலி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 72 ரன்களை குவித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். 

இந்த போட்டிக்கு முன், ரோஹித் சர்மா தான் 2422 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இந்த போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்ததால் 2434 ரன்களில் உள்ளார் ரோஹித். இந்த போட்டிக்கு முன் 2369 ரன்களில் இருந்த கோலி, இந்த போட்டியில் 72 ரன்கள் அடித்ததன் மூலம் 2441 ரன்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ரோஹித்தை விட வெறும் 7 ரன்கள் மட்டுமே கோலி அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாகவே இருக்கும்.