IPL 2023: ஐபிஎல்லில் பொல்லார்டு சாதனையை முறியடித்த விராட் கோலி
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கைரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து 5ம் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பல சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள விராட் கோலி, ஐபிஎல்லிலும் சாதனைகளை படைத்துவருகிறார்.
ஐபிஎல்லில் வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஆடிவரும் ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் வேட்கையில் உள்ளார் விராட் கோலி.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக விராட் கோலியும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் விராட் கோலி சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் ஆர்சிபி தோற்றது.
இன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் டாப் 3 வீரர்களான விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய மூவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். விராட் கோலி 44 பந்தில் 61 ரன்களையும் மேக்ஸ்வெல் 29 பந்தில் 59 ரன்களையும், ஃபாஃப் 46 பந்தில் 79 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது ஆர்சிபி. 213 ரன்கள் என்ற இலக்கை லக்னோ அணி விரட்டிவருகிறது.
இந்த போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசிய விராட் கோலி ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கைரன் பொல்லார்டை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி இந்த 4 சிக்ஸர்களின் மூலம் ஐபிஎல்லில் மொத்தமாக 227 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 223 சிக்ஸர்களுடன் 5ம் இடத்தில் இருந்த பொல்லார்டை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள்:
1. கிறிஸ் கெய்ல் - 357 சிக்ஸர்கள்
2. டிவில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள்
3. ரோஹித் சர்மா - 241 சிக்ஸர்கள்
4. தோனி - 232 சிக்ஸர்கள்
5. விராட் கோலி - 227 சிக்ஸர்கள்