ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே தொடர்ந்து டாப் 2 இடங்களில் நீடிக்கின்றனர். 

விராட் கோலி 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கிறார். ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்குகிறார். டெஸ்ட் அணியிலும் இப்போது நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். 

கோலியும் ரோஹித்தும் தனித்தனியாகவும் இணைந்தும் நிறைய சாதனைகளை செய்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகின்றனர். ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், முதலிடத்தில் விராட் கோலியும் இரண்டாமிடத்தில் ரோஹித் சர்மாவும் உள்ளனர். 

அவர்கள் இருவரையும் அந்த இடத்தில் இருந்து வார்னர், ஸ்மித், ரூட், வில்லியம்சன், டெய்லர் என சமகாலத்தின் எந்த சிறந்த பேட்ஸ்மேனாலும் பின்னுக்குத்தள்ள முடியவில்லை. இந்நிலையில், இன்று ஐசிசி வெளியிட்ட ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், 871 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும் 855 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றனர். 

இவர்கள் இருவரையும் அந்த இடத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியவில்லை. 829 புள்ளிகளுடன் பாபர் அசாம் மூன்றாமிடத்திலும் 818 புள்ளிகளுடன் ரோஸ் டெய்லர் நான்காமிடத்திலும் உள்ளனர். ஃபாஃப் டுப்ளெசிஸ் 790 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் உள்ளார். 

ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் டிரெண்ட் போல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அவரைவிட வெறும் 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கி 719 புள்ளிகளுடன் இந்தியாவின் பும்ரா இரண்டாமிடத்தில் உள்ளார்.