உலக கோப்பை தோல்வியை அடுத்து, இந்திய அணியின் செயல் திறனை மறு ஆய்வு செய்ய பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கேள்விக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்கி ரிஷப் பண்ட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வழி செய்யாமல், அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கிவிட்டு ஏழாம் வரிசையில் தோனியை இறக்கிவிட்டு அவருக்கு நெருக்கடியை அதிகரித்தது கடும் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அணி தேர்வும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியை அடுத்து அணியின் செயல் திறனை மறு ஆய்வு செய்ய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருடன் வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. 

அரையிறுதியில் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியதும் அவர்களுக்கு சிறு ஓய்வு கொடுத்துவிட்டு அதன்பின்னர் மறு ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் தேதி அறிவிக்கப்படாது எனவும் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

அந்த கூட்டத்தில், தோனியின் பேட்டிங் ஆர்டர், ராயுடுவின் புறக்கணிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் வரை அணியில் இருந்த ராயுடு கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் எடுக்கப்படவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ராயுடு, 2 வீரர்கள் காயத்தால் வெளியேறியபோதும் அணியில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட விரக்தியில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ராயுடு. 

எனவே ராயுடுவின் புறக்கணிப்பு குறித்து மட்டுமல்லாது அணியில் 3 விக்கெட் கீப்பர்கள் எடுக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என தெரிகிறது. தினேஷ் கார்த்திக்கை மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே அணியில் எடுத்த நிலையில், அவரை பிராதன பேட்ஸ்மேனாக கருத்தில்கொண்டு, ஆடும் லெவனில் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியது குறித்தும் கேள்வி எழுப்பப்படும் என தெரிகிறது.