இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை பேட்ஸ்மேனை இரண்டு ஆண்டுகளாக தேடியும் உலக கோப்பைக்கு முன் சரியான வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு, தகுதியான வீரர்கள் இல்லாதது காரணமல்ல, தகுதியான வீரரை கண்டறிய முடியாததுதான் காரணம்.

அதன் எதிரொலியாக உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்று வெளியேறியது. மிடில் ஆர்டர் சொதப்பல் தான் அதற்குக்காரணம். பேட்டிங் ஆர்டரில் இருந்த சிக்கலை தீர்க்கமுடியாத பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அவரை மீண்டும் பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்க பிசிசிஐ விரும்பவில்லை. 

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டனர். ஆனால் சஞ்சய் பங்கார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டார். 

விக்ரம் ரத்தோர் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து தனது பயிற்சியாளர் பணியை தொடங்கவுள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு 2 வீரர்களை அவர் தீர்வாக பார்க்கிறார். இதுகுறித்து பேசியுள்ள விக்ரம் ரத்தோர், நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு என்பது உலக கோப்பைக்காக காணப்பட வேண்டியது அல்ல. இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் சிக்கலால் சரியாக செயல்பட முடியாமல் இருக்கிறது. அதற்கு கண்டிப்பாக தீர்வு கண்டே தீர வேண்டும்.

ஷ்ரேயாஸ் ஐயர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் அபாரமாக ஆடினார். மனீஷ் பாண்டேவும் இருக்கிறார். இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் அபாரமாக ஆடியுள்ளனர். எனவே இவர்கள் இருவரை வைத்துத்தான் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.