உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த தொடரில் நேற்று தமிழ்நாடு அணியும் பிஹார் அணியும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய பிஹார் அணி 50 ஓவரில் 217 ரன்கள் அடித்தது. 

அந்த அணியின் கேப்டன் பாபுல் குமார் மட்டுமே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்களை குவித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், பெரிய பார்ட்னர்ஷிப் அமையாததால் நல்ல ஸ்கோரை அடிக்கமுடியாமல் வெறும் 217 ரன்கள் மட்டுமே அடித்தது. 

218 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 75 ரன்களை சேர்த்தனர். ஜெகதீசன் 24 ரன்களிலும் அபினவ் முகுந்த் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய ஹரி நிஷாந்த் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அப்ரஜித்தும் விஜய் சங்கரும் இணைந்து சிறப்பாக ஆடி, அதற்கடுத்து விக்கெட்டே விழாமல் பார்த்துக்கொண்டதோடு இலக்கை எட்டி, தமிழ்நாடு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். பாபா அபரஜித் மற்றும் விஜய் சங்கர் இருவருமே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விஜய் சங்கர் அபாரமாக பேட்டிங் செய்தார். உலக கோப்பைக்கு பெரும் எதிர்பார்ப்புடன் அழைத்து செல்லப்பட்ட விஜய் சங்கர், காயத்தால் பாதியில் விலகிய நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க, உள்நாட்டு போட்டிகளில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதை உணர்ந்து சிறப்பாகவே ஆடினார். 

88 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 91 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். அபரஜித்தும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் அடித்தார். 47வது ஓவரிலேயே தமிழ்நாடு அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

விஜய் சங்கர் ஆடிய 88 பந்துகளில் 7 பந்துகளில் தான் பவுண்டரியே(சிக்ஸருடன் சேர்த்து) அடித்துள்ளார். ஆனால் 88 பந்துகளில் 91 ரன்கள் அடித்ததற்கு காரணம், நன்றாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடினார்.