இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவராக உருவெடுத்த ஹர்திக் பாண்டியா, கடந்த அரையாண்டுக்கு மேலாகவே, காயம் காரணமாக உடற்தகுதி இல்லாமல் தவித்துவருகிறார். 

உலக கோப்பைக்கு முன், காயம் காரணமாக, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா இல்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற தமிழ்நாடு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். நியூசிலாந்து சுற்றுப்பயணம், அதன்பின்னர் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தியதை அடுத்து, உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்தார். 

அதன்பின்னர் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டதாக கூறப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் மற்றும் உலக கோப்பை தொடரில் ஆடினார். ஆனால் உலக கோப்பைக்கு பிறகு, மீண்டும் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த எந்த தொடரிலும் ஆடவில்லை. 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியை பரிசோதிக்காமலேயே, அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரை பரிசோதிக்கும்போது, அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாதது தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியை பரிசோதிக்காமலேயே அவர் அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார். அதனால் பரிசோதனையின்போது, அவர் உடற்தகுதியுடன் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழ்நாடு ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், இந்தியா ஏ அணியில் இணைந்துள்ளார். 

விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு செல்லும்போது தனது சக வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் மயன்க் அகர்வாலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.