உலக கோப்பை வரலாற்றில் தரமான ஒரு சம்பவத்தை இந்திய வீரர் விஜய் சங்கர் செய்துள்ளார். 

விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி நடந்தது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். 

தவான் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களமிறங்க, விஜய் சங்கர் நான்காம் வரிசைக்காக அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் விஜய் சங்கர். 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் கோலி, ராகுல் ஆகியோரின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் 50 ஓவர் முடிவில் 336 ரன்களை குவித்தது. பேட்டிங்கில் விஜய் சங்கருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 39வது ஓவரில்தான் ரோஹித் சர்மா இரண்டாவது விக்கெட்டாக தனது விக்கெட்டை இழந்தார். அதனால் நான்காம் வரிசையில் ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். அதனால் தோனிக்கு பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கருக்கு பேட்டிங் ஆட பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இடையில் மழை குறுக்கிட்டதால், அது அவரது பேட்டிங்கின் ஃப்லோவிற்கு தடையாகவும் இருந்தது. பேட்டிங்கில் சரியாக சோபிக்காவிட்டாலும் பவுலிங்கில் அசத்தினார் விஜய் சங்கர். 

337 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி 40 ஓவருக்கு 302 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி 40 ஓவரில் 212 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தனது 3வது ஓவரை வீசும்போது, புவனேஷ்வர் குமாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் பெவிலியன் திரும்ப, அந்த ஓவரின் எஞ்சிய 2 பந்துகளை வீசுவதற்காக விஜய் சங்கரை அழைத்தார் கேப்டன் கோலி. தான் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் விஜய் சங்கர். எஞ்சிய 2 பந்துகளை ஓவரை முடிப்பதற்காக விஜய் சங்கரிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. ஆனால் விஜய் சங்கரோ யாருமே எதிர்பார்த்திராத விதமாக முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். 

இதன் மூலம் உலக கோப்பை தொடரில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய நான்காவது வீரர் விஜய் சங்கர் ஆவார். இவருக்கு முன்னதாக பெர்முடாவின் மலாச்சி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் இயன் ஹார்வி, பாகிஸ்தானின் முகமது யூசுஃப் ஆகிய மூவரும் உலக கோப்பையில் தங்களது முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 

இந்த போட்டியில் விஜய் சங்கருக்கு பேட்டிங்கில் போதிய வாய்ப்பு இல்லையென்றாலும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.