இலங்கை அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. 

இலங்கை அணியில் 1992ம் ஆண்டு அறிமுகமாகி 19 ஆண்டுகாலம் கோலோச்சியவர் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். ஸ்பின் பவுலிங் என்றாலே உடனடியாக முரளிதரன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு தரமான ஸ்பின்னர். ஒரு ஸ்பின் பவுலர் 19 ஆண்டுகள் கோலோச்சுவது சாதாரண விஷயம் அல்ல. 

முரளிதரன் ஆடிய காலங்களில் இருந்த சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல பேட்டிங் ஜாம்பவான்களை தனது சுழலில் மிரட்டியவர் முரளிதரன். 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன் தான் முதலிடத்தில் உள்ளார். முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷேன் வார்னே, முரளிதரனை விட 92 விக்கெட்டுகள் பின் தங்கித்தான் உள்ளார்.

முரளிதரனின் இந்த சாதனையை இனிமேல் வேறு ஒரு பவுலர் முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயம். இந்நிலையில், முரளிதரனின் அடையாளமாக திகழும் “800” என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாகவும் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வராத நிலையில், இந்த ஆண்டின் கடைசியில் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.