இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

இந்த தொடரின் நான்காவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன், இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை சேர்த்தனர். 

அரைசதம் அடித்த பேர்ஸ்டோ 56 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஜோ ரூட் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு அலெக்ஸ் ஹேல்ஸுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். அலெக்ஸ் ஹேல்ஸ் 82 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 165 ரன்கள் இருந்தபோது ஹேல்ஸ் அவுட்டானார். அதன்பிறகு கேப்டன் இயன் மோர்கனுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். 

இயன் மோர்கன் - பட்லர் ஜோடி வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை தெறிக்கவிட்டது. குறிப்பாக பட்லர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 204 ரன்களை குவித்தது. மோர்கன் மற்றும் பட்லர் இருவருமே சதம் விளாசினர். மோர்கன் 103 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அடித்து ஆடிய பட்லர் 150 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

77 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 150 ரன்களை குவித்து பட்லர் ஆட்டமிழந்தார். பட்லர் மற்றும் இயன் மோர்கனின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 419 ரன்களை குவித்தது. 

420 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கேம்பெல் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷாய் ஹோப்பும் 5 ரன்களில் வெளியேறினார். முதல் 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் இழந்துவிட்ட போதிலும் அனுபவ அதிரடி தொடக்க வீரரான கெய்ல், இங்கிலாந்து அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். பட்லரும் மோர்கனும் சேர்ந்து அடித்த அடியை ஒரு ஆளாக அடித்தார். 

கெய்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய டேரன் பிராவோ அரைசதம் கடந்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 23 ஓவர்களில் 220 ரன்களை குவித்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதன்பிறகு ஹெட்மயர் 6 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கெய்ல், சதமடித்தார். அதன்பிறகு அதிரடியை தொடர்ந்த கெய்ல், 150 ரன்களையும் கடந்தார். கெய்ல் அடித்து வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற வைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 162 ரன்களில் கெய்ல் ஆட்டமிழந்தார். 

97 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் உட்பட 162 ரன்களை குவித்து கெய்ல் அவுட்டாகும்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஓவர்களில் 295 ரன்களை குவித்திருந்தது. இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்த அதேவேளையில், வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பிறகு ஹோல்டர், பிராத்வெயிட் மற்றும் நர்ஸ் ஆகியோர் முடிந்தவரை அடித்தனர். எனினும் இலக்கை எட்டமுடியவில்லை. 48 ஓவரில் 389 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது. இதையடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரை வெல்லும். வெஸ்ட் இண்டீஸ் வென்றால் தொடர் சமனாகும். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.