தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் நெருக்கடி காரணமாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வி.பி.சந்திரசேகரின் இறப்பு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள், சந்திரசேகரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

வி.பி.சந்திரசேகர் இந்திய அணிக்காக பெரிதாக ஆடவில்லை. தமிழ்நாட்டு அணிக்காக முதல்தர மற்றும் உள்நாட்டு போட்டிகளில் நிறைய ஆடியுள்ளார். தமிழக அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை. 1988ம் ஆண்டு முதல் 1990 வரை இந்திய அணிக்காக வெறும் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 88 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்காவிட்டாலும், தனது பெயர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வகையில், தனது கெரியரில் ஒரு சம்பவம் செய்துள்ளார். ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வரும் சிஎஸ்கே அணி, அந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக திகழும் தோனியை எடுத்ததே வி.பி.சந்திரசேகரால்தான்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே திகழ்கிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி அதிகபட்சமாக 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 3 முறை கோப்பையை வென்று, அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற இரண்டாவது அணியாக சிஎஸ்கே திகழ்கிறது. சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக வலம்வர தோனி தான் முக்கிய காரணம். தோனி சிஎஸ்கேவில் இணைய வி.பி.சந்திரசேகர் தான் காரணம். 

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் மேனேஜராக வி.பி.சந்திரசேகர் இருந்தார். அப்போது சிஎஸ்கே அணியின் ஓனர் ஸ்ரீநிவாசன், சேவாக்கை எடுக்கலாம் என்ற ஐடியாவில்தான் இருந்தார். ஆனால் சேவாக் வேண்டாம், தோனியை எடுக்கலாம் என்று கூறி தோனியை சிஎஸ்கே அணியில் எடுக்க வைத்தது வி.பி. தான். சிஎஸ்கே அணிக்காக வெற்றிகளை குவித்துக்கொடுத்த பின்னர் தான், தோனியை தமிழ்நாட்டு ரசிகர்கள், தல என அழைக்க தொடங்கினர். இன்றைக்கு மற்ற மாநிலத்தவர்களாலும் தோனி, தல என்று அழைக்கப்படுகிறார். சாதாரண தோனி, தல தோனி ஆனதன் பின்னணியில் வி.பி.சந்திரசேகர் உள்ளார்.