சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்திய தமிழ்நாடு, இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. 
 
மூன்றாவது போட்டியில் உத்தர பிரதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, தமிழ்நாடு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. 

முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தனர். முரளி விஜய் 42 பந்தில் 51 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடித்தார். இளம் வீரர்களான ஷாருக்கான 3 ரன்னும் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னும் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்துவிட்டார். அடித்து ஆட வேண்டிய கடைசி 2 ஓவர்களில், களத்தில் இல்லாமல் 19வது ஓவரின் முதல் பந்திலேயே விஜய் சங்கர் அவுட்டானார். அவர் கவனமாக ஆடியிருந்தால் கடைசி 12 பந்துகளில் கணிசமான ரன்னை அடித்திருக்கலாம். ஆனால் கடைசி 2 ஓவர்களில் பெரிதாக ஸ்கோர் செய்யாததால் 168 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது தமிழ்நாடு அணி. 

169 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய உத்தர பிரதேச அணியின் தொடக்க வீரர்கள் அக்‌ஷ்தீப் நாத் மற்றும் சமர்த் சிங் ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். சமர்த் சிங் 21 ரன்களும் அக்‌ஷ்தீப் நாத் 25 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய உபேந்திர யாதவ் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரிங்கு சிங் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷுபம் சௌபே, உபேந்திராவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக அடித்து ஆடினார். வெறும் 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்து தமிழ்நாடு அணியிடமிருந்து ஆட்டத்தை பறித்தார். அவர் 35 ரன்களில் அவுட்டாக, களத்தில் நன்றாக செட்டில் ஆகி சிறப்பாக ஆடிய உபேந்திரா, கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் விளாசி உத்தர பிரதேச அணியை வெற்றி பெற செய்தார். உபேந்திரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் அடித்தார். இதையடுத்து உத்தர பிரதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற தமிழ்நாடு அணி, முதல் தோல்வியை பெற்றுள்ளது.