பந்து காற்றில் இருக்கிறது... ஸ்ரீசாந்த் பிடித்துவிட்டார், இந்தியா வெற்றி!! என்று ரவி சாஸ்திரி வர்ணனை செய்து கொண்டிருந்த தருணத்தை அவ்வளவு எளிதாக எந்த இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறந்துவிடமுடியாது. ஆம்.. அதுதான் 2007ல் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்த தருணம் தான் அது. 

2007 ஒருநாள் உலக கோப்பையில், லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தது இந்திய அணி. இந்திய வீரர்களுக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் அது பேரிடியாக இருந்தது. அதையடுத்து, ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலக, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 

தோனி கேப்டனானதுமே, டி20 உலக கோப்பை நடந்தது. 1983க்கு பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணி வென்ற ஐசிசி டைட்டில் அது. முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. 

அந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்ற அந்த இந்திய அணியில் ஆடிய உத்தப்பா, பரபரப்பான அந்த தருணம் பற்றி பகிர்ந்துள்ளார்.

பிபிசி தூஸ்ரா பாட்கேஸ்ட்டில் பேசிய ராபின் உத்தப்பா, பாகிஸ்தான் அணி பேட்டிங்கின்போது, 15வது ஓவரிலிருந்தே ஒவ்வொரு பந்திற்கும் நான் பிரார்த்தனை செய்துகொண்டே தான் இருந்தேன். ஜோஹிந்தர் ஷர்மா வீசிய கடைசி ஓவரில் கடைசி 4 பந்தில் பாகிஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை.

ஜோஹிந்தர் ஷர்மா வீசிய பந்தை மிஸ்பா உல் ஹக், ஸ்கூப் ஷாட் ஆட பந்து காற்றில் பறந்தது. பந்து நீண்ட தூரம் போகவில்லை என்று தெரிந்ததும் உடனே, ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நிற்கும் ஃபீல்டர் யார் என்று பார்த்தேன்.. அங்கு நின்றது ஸ்ரீசாந்த். உடனே பயம் வந்தது. ஏனெனில் அணியில் அதிகமாக கேட்ச்களை கோட்டைவிடுவது அவர் தான். ஈசியான கேட்ச்களை கூட ஸ்ரீசாந்த் பிடிக்கமாட்டார். நானே நிறைய முறை, அவர் கேட்ச் விட்டு பார்த்திருக்கிறேன். 

எனவே, இறைவா.. எப்படியாவது ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்துவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். எப்போதும் கேட்ச்சை விடும் ஸ்ரீசாந்த், அதை பிடித்துவிட்டார் என்று பரபரப்பான அந்த தருணத்தை பற்றி பேசியுள்ளார்.