தோனி இலக்கை வெற்றிகரமாக விரட்டும் ரகசியம் என்னவென்று ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

237 ரன்கள் என்ற எளிய இலக்காக இருந்தாலும் 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், நிதானமாக பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆட்டத்தை எடுத்து சென்றனர். தோனி நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவசரப்படாமல் இலக்கை விரட்டினார். கேதர் ஜாதவையும் வழிநடத்தினார். 

தோனியின் பேட்டிங் குறித்து பேசிய உஸ்மான் கவாஜா, தோனி அவரது திட்டத்தை அருமையாக செயல்படுத்துகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று போட்டிகளிலும் நிதானமாக நின்று கடைசி வரை ஆடினார். அதையேதான் இந்த போட்டியிலும் செய்தார். சிங்கிள், சிங்கிள், இரண்டு ரன்கள் என்று அடித்துவிட்டு தேவையான நேரத்தில் பவுண்டரி அடிக்கிறார். அவசரப்படுவதே இல்லை. இது எல்லா நேரத்திலும் கை கொடுக்காது என்றாலும் அவர் அதை அருமையாக செயல்படுத்தி இலக்கை வெற்றிகரமாக விரட்டிவிடுகிறார் என்று உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

தோனி ஸ்மார்ட்டாக ஆடி இலக்கை விரட்டுவது குறித்து விஜய் சங்கரும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயம் குறித்து அண்மையில் பேசியிருந்த விஜய் சங்கர், ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி ஆடியதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்றாலும் அடிக்க முடியும். அனைத்து பந்துகளையுமே பவுண்டரி அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பவுண்டரியே போதும் என்று தோனி ஆடிய விதத்திலிருந்து கற்றுக்கொண்டேன். இலக்கை விரட்டும்போது அதை எளிதாக்கிவிடுவார் தோனி. அவருக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக தெரியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 44வது ஓவரில் தோனியும் கேதர் ஜாதவும் தலா ஒரு ரன்னையே எடுத்தனர். ஆனாலும் அதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அந்த நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் இருப்பதே முக்கியம். அதைத்தான் செய்தார்கள். மற்ற வீரர்களாக இருந்தால் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவை அடிக்க நினைத்திருப்பார்கள். அப்படி ஒருவேளை அடித்து ஆடியிருந்தால் ரன்கள் கிடைத்திருக்கும், இல்லையென்றால் விக்கெட்டை இழந்திருப்போம். ஆனால் இந்த ஓவரில் ஒரு ரன் தான் எடுத்திருக்கிறோம். ஆனாலும் வெற்றி பெறுவோம் என்று தோனி ஆடுவது வேற லெவல். சூழலின் நெருக்கடிகளை பார்த்து பயப்படாமல் ஆட வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக விஜய் சங்கர் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.