ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

ஐபிஎல்2020க்கான ஏலத்தில் பாட் கம்மின்ஸ் அதிகமான விலைக்கு ஏலம் போயுள்ளார். பாட் கம்மின்ஸை எடுக்க ஆர்சிபி அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் கடும் போட்டியிட்டன. ஆனால் கடைசியில் கேகேஆர் அணி, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கம்மின்ஸ். 

கம்மின்ஸுக்கு அடுத்து அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லை ரூ.10.30 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு ஆர்சிபி அணியும், ஆஸ்திரேலியாவின் பவுலிங் ஆல்ரவுண்டரான நாதன் குல்ட்டர்நைலை ரூ.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் எடுத்தன. 

இப்படி ஒருபக்கம் சில வீரர்கள் கோடிகளில் விலைபோக, சில பெரிய வீரர்கள் உட்பட பல வீரர்கள் விலைபோகவில்லை. முதற்கட்ட ஏலத்தின் முடிவில் விலைபோகாத வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

1. டேல் ஸ்டெய்ன் - தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் - அடிப்படை விலை ரூ.2கோடி

2. காலின் டி கிராண்ட் ஹோம் - நியூசிலாந்து ஆல்ரவுண்டர் - அடிப்படை விலை ரூ.75 லட்சம்

3. யூசுஃப் பதான் - அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர் - அடிப்படை விலை ரூ.1 கோடி

4. டிம் சௌதி - நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் - அடிப்படை விலை ரூ.1 கோடி

5. ஆண்ட்ரூ டை - ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் - அடிப்படை விலை ரூ.1 கோடி

6. முஷ்ஃபிகுர் ரஹீம் - வங்கதேச விக்கெட் கீப்பர் - அடிப்படை விலை ரூ.75 லட்சம்

7. எவின் லூயிஸ் - வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் - அடிப்படை விலை ரூ.1 கோடி

இவர்கள் தவிர இந்திய வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டனர். ஆடம் ஸாம்பா, ஷாய் ஹோப் ஆகிய வீரர்களும் விலைபோகவில்லை.