உலக கோப்பை தொடரில் டிவில்லியர்ஸின் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய் முறியடித்துள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் எந்த வீரருமே சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிந்தன. அதனால் 22வது ஓவரிலேயே வெறும் 105 ரன்களுக்கே ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. 

வெறும் 106 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல், தொடக்கம் முதலே அடித்து ஆடி 33 பந்துகளில் அரைசதம் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் வெற்றி பெற உதவினார். கெய்லின் அதிரடியான தொடக்கத்தால் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 பந்துகளில்  50 ரன்கள் அடித்தார் கெய்ல். இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். 37 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்து 40 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.