அதிலும் அண்மைக்காலமாக அம்பயர்களின் செயல்பாடுகள் மிகுந்த அதிருப்தியளிக்கும் விதமாக அமைந்துள்ளன. ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளிலும் அம்பயர்கள் ஏராளமான தவறிழைக்கின்றனர். ஐபிஎல்லில் அம்பயர்கள் நோ பால்களை சரியாக கண்காணித்து நோ பால் கொடுக்காததால், போட்டியின் முடிவே மாறியிருக்கிறது. ஐபிஎல்லில் நோ பால்களை மட்டும் கண்காணிப்பதற்கென்றே பிரத்யேக டிவி அம்பயரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான சர்வதேச டெஸ்ட் போட்டியில் அம்பயர்கள் 21 நோ பால்களை கண்டுகொள்ளாதது, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி. அதில்போய் அம்பயர்கள் இப்படி அலட்சியம் காட்டியது, வருத்தத்திற்குரிய விஷயம். 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 240 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்து ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இரண்டாம் நாள்(22ம் தேதி) ஆட்டத்தில் முதல் இரண்டு செசன்களில் மட்டும் 21 நோ பால்களை அம்பயர்கள் சரியாக பார்க்கவில்லை. பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் வீசிய 21 நோ பால்களுக்கு அம்பயர்கள் நோ பால் கொடுக்கவில்லை. இந்த போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்பாரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகிய இருவரும் அம்பயர்களாக செயல்பட்டுவருகின்றனர். 

இவர்கள் இருவருமே நல்ல தரமான அம்பயர்கள் தான். ஆனாலும் 21 நோ பால்களை சரிவர கவனிக்காமல் மிஸ் செய்துள்ளனர். முதல் 2 செசனில் 22 நோ பால்கள் வீசப்பட்டுள்ளன. அதில் ஒரேயொரு நோ பால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் 21 நோ பால்களை அம்பயர்கள் மிஸ் செய்துவிட்டனர். ஒன்றிரண்டு மிஸ் செய்தால் பரவாயில்லை. தவறுகள் நடப்பது இயல்புதான். மிக துல்லியமாக பார்க்க முடியாது. 

எனவே லைனில் கால் வைத்தாற்போல் தெரிந்தால்கூட, அம்பயர்கள் கொடுக்கமாட்டார்கள். ஆனால் 21 நோ பால்கள் என்பது ரொம்ப அதிகம். அதிலும் அவற்றில் பெரும்பாலானவை, பவுலர்கள் க்ரீஸிலிருந்து அதிகமான தொலைவில் கால் வைத்து வீசியிருக்கிறார்கள். அதைக்கூட அம்பயர்கள் கவனிக்கவில்லை என்பது வேதனையான விஷயம் மட்டுமல்லாது கிரிக்கெட்டின் தரத்தையும் அம்பயர்களின் மீதான நம்பிக்கையையும் கீழே கொண்டு செல்லக்கூடியது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெறும் 3 நோ பால்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வீசப்பட்டதோ சுமார் 25 நோ பால்கள். அந்த வீடியோ இதோ..

இந்த போட்டியில் வார்னர் 154 ரன்களை குவித்தார். ஆனால் வார்னர் அரைசதம் அடிக்கும் முன்னதாகவே நசீம் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் ரீப்ளேவில் அது நோ பால் என்பது தெரிந்தது. அதில் தப்பிய வார்னர், சதமடித்து 154 ரன்களை குவித்தார். இப்படியாக இந்த போட்டி முழுவதும் பாகிஸ்தான் பவுலர்கள் நோ பால்களை வீசித்தள்ளினர்.