இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே புனேவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நேற்றே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை டி ப்ருய்னும் நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட நோர்ட்ஜேவும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நோர்ட்ஜேவை ஷமி வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து டி ப்ருய்னை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 

அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த டுப்ளெசிஸ்-டி காக் ஜோடியை அஷ்வின் பிரித்தார். டி காக்கை 31 ரன்களில் அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் உணவு இடைவேளை முடிந்து திரும்பியதும் முத்துசாமியை ஜடேஜா வீழ்த்தினார். 150 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தென்னாப்பிரிக்க அணி. 

ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், உமேஷ் மற்றும் ஷமி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த, இஷாந்த் சர்மாவிற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. இப்படியிருக்க, இஷாந்த் சர்மா இந்த இன்னிங்ஸில் இரண்டு முறை பந்துவீசிவிட்டு பிட்ச்சிற்கு நடுவே ஓடிவிட்டார். முதல்முறை பிட்ச்சின் நடுவே கால்வைத்ததும் அம்பயர் எச்சரிக்கை செய்தார். ஆனால் அதையும் மீறி இரண்டாவது முறையும் இஷாந்த் சர்மா பந்துவீசி முடிந்ததும் பிட்ச்சின் நடுவே ஓடியதால் அம்பயர் இரண்டாவது முறையாக எச்சரிக்கை செய்தார். 

ஒரே இன்னிங்ஸில் அம்பயர் 2 முறை இஷாந்த் சர்மாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தெரிந்தோ அல்லது தெரியாமலோ, ஆனால் இன்னொரு முறை அதேமாதிரி செய்தால் இஷாந்த் சர்மா இந்த இன்னிங்ஸில் மீண்டும் பந்தே வீசமுடியாது.