நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக தோற்று ஒயிட்வாஷ் ஆனது. முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெறும் இரண்டரை நாளில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியை 2-0 என ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரரின் செயல்பாடு, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அமைந்தது. 

132 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிய போது இரண்டாவது இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் அந்த சம்பவம் நடந்தது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை டாம் லேதம் ஃபைன் லெக் திசையில் அடித்துவிட்டு ரன் ஓடினார். டாம் லேதமும் டாம் பிளண்டெலும் ரன் ஓடிக்கொண்டிருந்த போது, இந்திய வீரர் ஒருவர், Two Two என சத்தம்போட்டுள்ளார். லேதமும் பிளண்டெலும் ஒரு ரன் ஓடும் மனநிலையில் முதல் ரன் தான் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்திய வீரர் அவர்களின் கவனத்தை சிதறடிப்பதற்காகத்தான் டூ டூ என கத்தியதாக கருதிய கள நடுவர் கெட்டில்பாரோ, கேப்டன் கோலியை அழைத்து, இந்திய வீரரின் செயலை கண்டித்தார். 

Also Read - என்ன நடந்ததுனு முழுசா தெரிஞ்சுகிட்டு கேள்வி கேளுங்க.. அரைகுறை அறிவுடன் படுத்தாதீங்க.. பத்திரிகையாளரிடம் கடுப்பான கோலி

ஆனால் கோலியோ, 2 ரன்கள் ஓடிவிடப்போகிறார்கள் என்று ஃபைன் லெக் திசையில் நின்ற ஃபீல்டரை, எச்சரிப்பதற்காக அந்த வீரர் அப்படி கூறியதாக கோலி விளக்கமளித்தார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத அம்பயர், கேப்டன் கோலியிடம் இதுபோன்று செயல்படக்கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்துமாறு கண்டித்து அனுப்பினார்.