இந்திய அணிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இந்த நியூசிலாந்து தொடர் சரியாக அமையவில்லை. இந்த நியூசிலாந்து தொடர் இந்திய அணிக்கு மறக்கப்பட வேண்டிய ஒரு தொடராக அமைந்தது. டி20 தொடரை 5-0 என வென்ற இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 தொடர்களிலுமே ஒயிட்வாஷ் ஆனது. 

விராட் கோலி இந்த தொடர் முழுவதுமே சரியாக ஆடவில்லை. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 தொடர்களிலுமே சரியாக ஆடவில்லை. கடந்த 22 இன்னிங்ஸ்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 4 இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக சேர்த்தே வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடியதில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் அடித்தது. மற்ற 3 இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை கூட எட்டவில்லை. 

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியடைந்து இந்திய அணி தொடரை இழந்தது. பொதுவாக ஆக்ரோஷமான அணுகுமுறையை கொண்டவர் கேப்டன் விராட் கோலி. இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ களத்தில் ஆக்ரோஷமானவர். அவரது ஆக்ரோஷமும் வெற்றி வேட்கையும், அவரிடமிருந்து மற்ற வீரர்களிடமும் இருக்கும். அந்த ஆக்ரோஷம் தான் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எப்போதும் வெளிக்கொண்டுவருகிறது. ஆனால் நியூசிலாந்தில், அவர் அப்படியான ஆக்ரோஷ அணுகுமுறையை கையாளவில்லை. நியூசிலாந்து அணியை மென்மையாகவே எதிர்கொண்டார். நியூசிலாந்து வீரர்கள் சிறந்தவர்கள் என்று புகழ்ந்தார். கோலியின் இந்த மென்மையான அணுகுமுறை, அவர்களை போட்டியாக பார்ப்பதற்கே தடையாக அமைந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. 

முதல் டெஸ்ட் போட்டியில் மரண அடி வாங்கியதுமே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது ஆக்ரோஷத்தை வெளிக்கொண்டுவந்து வீரர்களை உற்சாகமும் உத்வேகமும் படுத்தினார். இரண்டாவது டெஸ்ட்டில் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமின் விக்கெட்டுகளை வெறித்தனமாக கொண்டாடினார் கோலி. முதல் இன்னிங்ஸில் வில்லியம்சன் அவுட்டானதை அடுத்து, அதை ஆக்ரோஷமாக கோலி கொண்டாடிய வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல டாம் லேதமின் விக்கெட் விழுந்த பிறகு, ரசிகர்களை நோக்கி கடும் ஆக்ரோஷத்துடன் தகாத வார்த்தையில் பேசினார் கோலி. 

இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலியிடம், நீங்கள் உங்களது ஆக்ரோஷத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டுமோ? ஆக்ரோஷத்தை  கொஞ்சம் குறைத்து அணிக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கோலியிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். 

Also Read - 2வது டெஸ்ட்டிலும் இந்தியா படுதோல்வி.. இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்த கேள்வியை கேட்டு செம கடுப்பான கோலி, என்ன நடந்தது என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு, இதைவிட ஒரு நல்ல கேள்வியை கேளுங்கள். அதுதொடர்பாக நான் போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன். நீங்கள் அரைகுறை அறிவுடன் இங்கு வந்து இதுபோன்று கேட்காதீர்கள். நன்றி என காட்டமாக பதிலளித்தார்.