வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அம்பயர் ஸ்டீவ் பக்னர். 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் மிகப்பிரபலமான அம்பயர். 128 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மற்றும் 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அம்பயரிங் செய்த, மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர் ஸ்டீவ் பக்னர். 

1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய, தொடர்ச்சியாக 5 உலக கோப்பை ஃபைனல்களில் அம்பயரிங் செய்த பெருமைக்குரியவர். மிகச்சிறந்த அம்பயரான ஸ்டீவ் பக்னர், அவரது அம்பயரிங் கெரியரில் சச்சின் டெண்டுல்கருக்கு 2 முறை படுமோசமாக அவுட் கொடுத்து சர்ச்சைகளுக்கு ஆளானார்.

எவ்வளவு அனுபவம் வாய்ந்த அம்பயராக இருந்தாலும், சில நேரங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால், இப்போது முடிந்தளவிற்கு பெரும்பாலும் தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் டி.ஆர்.எஸ் உதவியுடன் கள அம்பயரின் முடிவை ரிவியூ செய்ய முடியும். ஆனால் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வசதியெல்லாம் கிடையாது. அம்பயர் அவுட் கொடுத்தால் முடிந்துவிட்டது. 

அந்தவகையில், அம்பயர்களின் தவறான தீர்ப்புகளால் அதிகமுறை பாதிக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கராகத்தான் இருக்கும். அம்பயர் ஸ்டீவ் பக்னர் மிகச்சிறந்த அம்பயராக இருந்தபோதிலும், சில முறை படுமோசமான முறையில் அப்பட்டமாக அவுட் என தெரிந்ததற்கு அவுட் இல்லையென்றும், அவுட் இல்லை என்று தெரிந்தவற்றிற்கு அவுட்டும் கொடுத்துள்ளார். 

அதில், ஸ்டீவ் பக்னர் சச்சினுக்கு இரண்டு முறை தவறுதலாக அவுட் கொடுத்தது மிகப்பிரபலம். 2003ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில், பந்து ஸ்டம்ப்புக்கு மேலே சென்றது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் அதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு எல்பிடபிள்யூ என்று அவுட் கொடுத்துவிட்டார். அதேபோல 2005ல் பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட்டில், அப்துல் ரசாக்கின் பந்தில், சச்சினின் பேட்டில் படாததற்கு, விக்கெட் கீப்பிங் கேட்ச் என அவுட் கொடுத்துவிட்டார். இவையிரண்டும் ஸ்டீவ் பக்னரின் கெரியரில் அவர் கொடுத்த மோசமான அவுட்டுகளில் முக்கியமானவை. 

இந்நிலையில், அந்த சம்பவங்கள் குறித்து மேசன் அண்ட் கெஸ்ட்ஸ் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தவறுதலாக அவுட் கொடுத்த சம்பவங்கள் குறித்து பேசிய ஸ்டீவ் பக்னர், டெண்டுல்கருக்கு 2 முறை தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்த அம்பயருமே வேண்டுமென்றே தவறான முடிவெடுக்கமாட்டார். அது அந்த அம்பயரின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக அமைந்துவிடும்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆஸ்திரேலியாவில் ஒருமுறை ஸ்டம்ப்புக்கு மேலே சென்ற பந்துக்கு சச்சினுக்கு எல்பிடபிள்யூ கொடுத்துவிட்டேன். அதேபோல மற்றொன்று, தவறுதலாக விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று அவுட் கொடுத்தது. பந்து பேட்டை கடக்கும்போது அதன் திசை மாறியது. அதனால் அவுட் கொடுத்தேன். ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை. அந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. 10 ஆயிரம் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இந்த மாதிரியான தவறுகள் என் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையுமே கெடுத்தன. அந்த தவறுகள் எல்லாம் எனது தன்னம்பிக்கையை சிதைக்கவில்லை. மாறாக அந்த தவறுகளிலிருந்து பாடம் கற்று மேம்பட்டேன். 

இப்போதெல்லாம் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. எங்கள் காலத்தில் எல்லாம், பேட்ஸ்மேன் இறங்கிவந்து ஆடும்போது, அவரது கால்காப்பில் பந்து பட்டால் அதற்கு அவுட் கொடுக்க மாட்டோம். இப்போதெல்லாம் அப்படியில்லை. டெக்னாலஜி மூலமாக கண்டறிந்துவிடலாம். இப்போது, அம்பயர்கள் தவறு செய்தால், களத்தில் உடனேயே அது சரி செய்யப்பட்டுவிடுகிறது.

நான் தவறுதலாக அவுட் கொடுத்தபோது, நான் தவறுதலாக கொடுத்துவிட்டேன் என்று தெரிந்ததும், அன்றைய இரவு எனக்கு தூக்கமே வராது. தூங்க நீண்ட நேரம் ஆகும் என ஸ்டீவ் பக்னர் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

இவர் சச்சினுக்கு தவறுதலாக அவுட் கொடுத்த காலக்கட்டத்திலும் சரி, அதன் விளைவாக இன்றுவரையும் சரி, அம்பயர் ஸ்டீவ் பக்னர் மீது கடுங்கோபத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.