கிரிக்கெட்டில் அம்பயரிங் மிக முக்கியமான, பொறுப்பான பணி. அம்பயர்கள் தான் கிரிக்கெட் வீரர்களை பக்கத்தில் இருந்து நன்கு உன்னிப்பாக கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். கேப்டன்கள் மட்டுமல்லாது அனைத்து வீரர்களின் திறமை, வியூகங்கள், கள செயல்பாடுகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். 

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகள் அம்பயரிங் செய்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் டௌஃபெல், தான் பார்த்தவரையில் சிறந்த கிரிக்கெட் மூளைகள் என்று 3 பேரை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அம்பயர் சைமன் டௌஃபெல், 1999ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை 74 டெஸ்ட், 174 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளுக்கு அம்பயராக இருந்துள்ளார். தனது 24வது வயதில் அம்பயரிங் கெரியரை தொடங்கிய சைமன் டௌஃபெல், சாதாரண கிளப் கிரிக்கெட் அம்பயரிலிருந்து, சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த அம்பயர் விருதை அடுத்தடுத்த ஆண்டுகளில் வெல்லுமளவிற்கு உயர்ந்தவர். 2011 உலக கோப்பை ஃபைனல் உட்பட பல முக்கியமான போட்டிகளில் சிறப்பாக அம்பயரிங் செய்தவர். 

இந்நிலையில், அவர் கவுரவ் கபூருடனான உரையாடல் நிகழ்ச்சியில், தான் பார்த்த சிறந்த கிரிக்கெட் மூளைகளாக தோனி, டேரன் லேமன், ஷேன் வார்ன் ஆகிய மூவரையும் சைமன் டௌஃபெல் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய சைமன் டௌஃபெல், தோனி மிகச்சிறந்த கிரிக்கெட்டர். நான் பார்த்த மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் தோனி. டேரன் லேமன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரும் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர்கள். நான் பார்த்ததில், மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைகள் இவர்கள் மூவரும் தான். தோனி மிகவும் நிதானமாக ரிலாக்ஸாக செயல்படுவார். இவர்களை எல்லாம் எனது கெரியரில் கடந்துவந்தது என் அதிர்ஷ்டம். தோனி நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவர் என்று சைமன் டௌஃபெல் தெரிவித்துள்ளார்.