சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அளவிற்கு எதிரி அணிகள் வேறு எதுவுமே இல்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளும் வெற்றிக்காக வெறித்தனமாக ஆடுவார்கள் என்பதை கடந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்டேடியத்தில் ரசிகர்களின் முழக்கம் விண்ணை பிளக்கும். 

கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அம்பயரிங் செய்வது மிகவும் கடினமான பணி. அதிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அம்பயரிங் செய்வது மிகவும் கடினம். இப்போதாவது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், தொழில்நுட்ப உதவியுடன், முடிந்தவரை துல்லியமான முடிவுகளை பெற முடிகிறது. நடுவர்களுக்கு ஏற்றவகையில் பல விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது. தொழில்நுட்ப உதவியில்லாத காலத்தில் நடுவர்கள் மிகக்கவனமாக செயல்பட்டாக வேண்டும். அதிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால், அம்பயர்களின் பீதி அதிகமாகவே இருக்கும். ரசிகர்களுக்கு அம்பயர்கள் பயப்படுவார்கள். 

அந்தவகையில், சீனியர் அம்பயர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த இயன் குட், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு அம்பயரிங் செய்தது குறித்து பேசியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 298 முதல் தர போட்டிகளிலும் 315 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு நடுவராக செயல்பட்டுவருகிறார். 74 டெஸ்ட், 140 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள இயன் குட், 

ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அம்பயர் இயன் குட், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அம்பயரிங் செய்தது குறித்து பேசியுள்ளார். 

”இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு அம்பயரிங் செய்வதே அச்சுறுத்தலாக இருக்கும். வீரர்கள் மீதான அச்சமல்ல. இரு அணி வீரர்களுமே மிகச்சிறந்தவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். ஆனால் ரசிகர்களை கண்டுதான் பயம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 7-8 போட்டிகளுக்கு நான் அம்பயரிங் செய்துள்ளேன். வீரர்கள் இனிமையானவர்கள். அவர்களுக்குள்ளாகவே நன்றாக பழகுவார்கள். ஆனால் ரசிகர்களின் ஆக்ரோஷம் தான் கடுமையாக இருக்கும். ரசிகர்களின் கூச்சல், அம்பயர்களின் கவனத்தையே சிதறடிக்குமளவிற்கு இருக்கும். தவறான முடிவுகளை எடுத்துவிட்டால் அவ்வளவுதான் என்று தனது பீதியை வெளிப்படுத்தியுள்ளார் அம்பயர் இயன் குட்.