கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அம்பயரிங் செய்வது மிகவும் கடினமான பணி. இப்போதாவது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், தொழில்நுட்ப உதவியுடன், முடிந்தவரை துல்லியமான முடிவுகளை பெற முடிகிறது. நடுவர்களுக்கு ஏற்றவகையில் பல விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது. தொழில்நுட்ப உதவியில்லாத காலத்தில் நடுவர்கள் மிகக்கவனமாக செயல்பட்டாக வேண்டும். அந்தவகையில் அம்பயரிங் பணியை பல ஆண்டுகளாக சிறப்பாக செய்துவரும் சீனியர் அம்பயர்களில் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்த இயன் குட்.  

இங்கிலாந்து அணிக்காக 18 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 298 முதல் தர போட்டிகளிலும் 315 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு நடுவராக செயல்பட்டுவருகிறார்.

74 டெஸ்ட், 140 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளுக்கு அம்பயரிங் செய்துள்ள இயன் குட், தனது அம்பயரிங் கெரியரில், பல சிறந்த பேட்ஸ்மேன்களை நேருக்கு நேராக நின்று பார்த்துள்ளார். அந்தவகையில், சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில், தனது பார்த்தவரையில், யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இயன் குட், ஜாக் காலிஸின் பேட்டிங்கை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மிக மிக மிகச்சிறந்த வீரர் ஜாக் காலிஸ். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அபாரமாக பேட்டிங் ஆடுவார்கள். எனவே அவர்கள் மூவரின் பேட்டிங்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரிக்கி பாண்டிங்கின் மிகச்சிறந்த பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் அருமையான வீரர். மிகச்சிறந்த கேப்டன்; ஆஸ்திரேலியாவின் பெருமை அவர் என்று பாண்டிங்கை புகழ்ந்துள்ளார்.

மேலும் விராட் கோலி தன்னை போல சில நேரங்களில் பேட்டிங் ஆடியிருப்பதாகவும், அவரது பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கரின் சாயல் இருக்கும் எனவும் இயன் குட் தெரிவித்துள்ளார்.