அம்பயர் அலீம் தர், கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக செய்திகளில் அடிக்கடி வரக்கூடியவர். பாகிஸ்தானை சேர்ந்த அம்பயர் அலீம் தர் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த அம்பயர்களில் ஒருவர். களத்தில் மிகவும் உற்சாகமாக அம்பயரிங் செய்பவர். 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரன் அவுட் செய்வதற்காக டிம் சௌதி வீசிய த்ரோவிலிருந்து அடிபடாமல் தப்பிப்பதற்காக ஓடிய அவர், மிட்செல் சாண்ட்னெரின் மீது மோதியதில் அவரது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக நியூசிலாந்து ஃபிசியோதெரபிஸ்ட் களத்திற்கு வந்து அலீம் தருக்கு சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் அலீம் தர் தொடர்ந்து அம்பயரிங் செய்தார். 

அதே போட்டியில் ஸ்மித் தூக்கிப்போட்ட தொப்பியை லாவகமாக அலீம் தர் கேட்ச் பிடித்த வீடியோவும் செம வைரலானது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய ஆட்டத்தில், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஃபிலிப்ஸிற்கு, நேதன் லயனின் ஓவரில் ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் லெக் அம்பயராக நின்ற அலீம் தருக்கு அது இடையூறாக இருக்க, உடனடியாக ஸ்கொயர் லெக் திசையில் நின்ற அம்பயர் அலீம் தர், பாயிண்ட் திசைக்கு ஓடினார். சிரித்துக்கொண்டே உற்சாகத்துடன் வேகமாக அவர் ஓடிய வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டரில் பகிர்ந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. 

அம்பயர் அலீம் தரின் செயல்பாட்டை ரசிகர்களும் வர்ணனையாளர்களும் ரசித்தனர். ரோபோ மாதிரி களத்தில் நிற்கும் அம்பயர்களுக்கு மத்தியில் எப்போதுமே உற்சாகமாக இருக்கும் அலீம் தர், அம்பயர்களில் சற்று சிறப்பானவரே. 

கிரிக்கெட் வீரர்களை போலவே சில அம்பயர்களுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் அம்பயர் டேவிட் ஷேபேர்டு, அம்பயர் பில்லி பௌடன் ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற அம்பயர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் வரிசையில் கண்டிப்பாக அலீம் தரும் ஒருவர்.