கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என எதுவாக இருந்தாலும், ஏற்கனவே செய்யப்பட்ட நல்ல சாதனைகளை பல வீரர்கள் முறியடித்தால், கேவலமான சாதனைகளை முறியடிக்கவும் சில வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தொடர்ந்து மோசத்திலும் மோசமான சாதனைகளை நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். 

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பேட்டிங்கில் ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவரும் நிலையில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மோசமான ஒரு சாதனையை முறியடிப்பதில் மும்முரமாக செயல்பட்டுவருகிறார். 

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்தது. 166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. 

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டு, இந்த போட்டியில் களமிறங்கிய உமர் அக்மல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் விக்கெட்டை இரண்டாவது ஓவரிலேயே இழந்துவிட்ட நிலையில், சிறப்பாக ஆடியாக வேண்டிய சூழலில் இறங்கிய உமர் அக்மல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில், அவர்கள் நாட்டு அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி இரண்டாமித்தை பிடித்துள்ளார். அஃப்ரிடி 8 முறை டக் அவுட்டாகியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 9 முறை டக் அவுட்டான உமர் அக்மல், அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளிவிட்டார். இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான் 10 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.