கரீபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் காட்டடி அடித்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தி காட்டினர். தொடக்க வீரர் சுனில் நரைன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான லெண்டில் சிம்மன்ஸும் கோலின் முன்ரோவும் இணைந்து, ஜமைக்கா அணியின் பவுலிங்கை பொளந்துகட்டிவிட்டனர். 

இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 124 ரன்களை குவித்தனர். சிம்மன்ஸ், முன்ரோ ஆகிய இருவருமே தாறுமாறாக அடித்து ஆட, இருவரில் ஒருவரைக்கூட கட்டுப்படுத்தவும் முடியாமல், விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் விழிபிதுங்கி நின்றனர் ஜமைக்கா அணியின் பவுலர்கள். 

42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்து 15வது ஓவரில் ஆட்டமிழந்தார் சிம்மன்ஸ். அவர் அவுட்டாகும்போதே ட்ரின்பாகோ அணியின் ஸ்கோர் 179. அதன்பின்னர் எஞ்சிய 5 ஓவர்களில் முன்ரோவும் பொல்லார்டும் இணைந்து தெறிக்கவிட்டனர். 

முன்ரோ களமிறங்கியது முதலே அடித்து நொறுக்கிக்கொண்டிருக்க, அவருடன் பொல்லார்டும் இணைந்து அடித்து துவம்சம் செய்தார். இருவரும் அதிரடியாக ஆடி, 20 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோரை 267 ஆக உயர்த்தினர். முன்ரோ 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார் முன்ரோ. பொல்லார்டு தன் பங்கிற்கு 17 பந்துகளில் 45 ரன்களை குவித்து கொடுத்தார். 

டி20 கிரிக்கெட் வரலாற்றில்(சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் போட்டிகள் என அனைத்து டி20 போட்டிகளையும் உள்ளடக்கிய) இதுதான் டாப் இரண்டாவது ஸ்கோர். டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அடித்துள்ள 278 ரன்கள் தான் டாப் ஸ்கோர். செக் குடியரசு அணி, துருக்கி அணிக்கு எதிராக இதே ஸ்கோரை அடித்துள்ளது. 

இந்நிலையில், 267 ரன்களை குவித்த ட்ரின்பாகோ அணி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.ஆர்சிபி அணி 2013ல் அடித்த 263 ரன்கள் என்ற ரெக்கார்டை பிரேக் செய்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 

268 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜமைக்கா அணி, கடுமையாக போராடி 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் அடித்தது. இதையடுத்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.