சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ரூட்டை விட மற்ற மூவரும் கொஞ்சம் டாப் வீரர்கள். 

ஏனெனில் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்வதோடு சாதனைகளையும் குவித்துவருகின்றனர். ஆனால் ரூட் அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்பதால் அவர் டி20யில் ஆடுவதில்லை. 

கோலி - ஸ்மித் - வில்லியம்சன் ஆகிய மூவருமே திறமையின் அடிப்படையில் சிறந்த வீரர்கள் தான் என்றாலும் சாதனைகள் மற்றும் நம்பர்களின் அடிப்படையில் பார்த்தால், கோலி, ஸ்மித், வில்லியம்சன் என்று வரிசைப்படுத்தலாம்.

ஸ்மித் ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான வித்தியாசமாக அமைந்து, ஆஸ்திரேலிய அணியின் 2 வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து சாதனை படைத்தார். 

ஆஷஸ் தொடரில் ஸ்மித்தின் பேட்டிங், ஸ்மித் - கோலி இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதத்தை எழுப்பியது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறார். வில்லியம்சனும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 

இவர்கள் மூவரும் மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் ஜொலிக்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று ஸ்மித்தின் இளம் வயது பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் கருத்து தெரிவித்துள்ளார்.

கோலி - ஸ்மித் - வில்லியம்சன் ஆகிய மூவரும் தலைசிறந்த வீரர்கள் என்றௌ புகழ்ந்த ட்ரெண்ட் உட்ஹில், அவர்கள் அனைத்துவிதமான போட்டிகளிலும் அசத்துவதற்கான காரணத்தையும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ட்ரெண்ட் உட்ஹில், கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகிய மூவருமே, தங்களது பேட்டிங்கை பாதிக்காத வகையில், பேட்டிங் பிடிமானத்தை மாற்றி பிடிக்க்ம் திறன் பெற்றவர்கள். மிகச்சிறந்த வீரர்களுக்குக்கூட, பேட்டிங் பிடிமானம் மாறினால் அவர்களால் சரியாக ஆடமுடியாது. ஆனால் கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகிய மூவரும் எந்த விதமான போட்டிகளில் ஆடினாலும் அதற்கேற்றவாறு பேட்டை பிடிக்கும் முறையை மாற்றி, சிறப்பாக ஆடும் திறன் பெற்றவர்கள். அது அவர்களது பேட்டிங்கை பாதிக்காமல் ஆடுவதுதான் இவர்களை சிறந்த வீரர்களாக வைத்திருக்கிறது என்று ட்ரெண்ட் உட்ஹில் தெரிவித்தார்.