நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகினார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது பிரித்வி ஷாவா அல்லது ஷுப்மன் கில்லா என்ற கேள்வி எழுந்தது. பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா தொடக்க வீரராக இறங்கினார். எனவே பிரித்வி ஷா தான் தொடக்க வீரர் என்பது உறுதியானது. 

அதேபோலவே பிரித்வி ஷா தான் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்கினார். ஷுப்மன் கில்லுடனான கடும் போட்டியில் தனக்கான வாய்ப்பை உறுதி செய்து, தொடக்க வீரராக இறங்கிய பிரித்வி ஷா, 2 இன்னிங்ஸிலுமே சரியாக ஆடவில்லை. வெலிங்டனில் நடந்துவரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது அனைத்து வீரர்களுக்குமே சவாலாக இருந்தது. கோலி, புஜாரா போன்ற அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்களே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பிரித்வி ஷா முதல் இன்னிங்ஸில் வெறும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது. ரஹானேவும் ஹனுமா விஹாரியும் களத்தில் உள்ளனர். 

இரண்டாவது இன்னிங்ஸில் மயன்க் அகர்வால் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். அரைசதம் அடித்த அவர் அவசரப்பட்டு 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த இன்னிங்ஸிலும் பிரித்வி ஷா, புஜாரா, கோலி ஆகிய மூவரும் சரியாக ஆடவில்லை. மூவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, இந்த இன்னிங்ஸில் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

பிரித்வி ஷாவை மிகச்சிறப்பாக திட்டமிட்டு, அந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்தி வீழ்த்தினார் டிரெண்ட் போல்ட். டிரெண்ட் போல்ட்டும் நியூசிலாந்து அணியும் விரித்த வலையில், அவர்கள் நினைத்ததை போலவே சிக்கினார் பிரித்வி ஷா. 

Also Read - இக்கட்டான சூழலில் இலங்கை அணியை கரைசேர்த்த ஹசரங்கா.. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி

டிரெண்ட் போல்ட் வீசிய 8வது ஓவரில், ஃபீல்டர் டாம் லேதமை ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்திவிட்டு, லெக் திசையில் ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார் டிரெண்ட் போல்ட். அவர் நினைத்தது மாதிரியே, அந்த பந்தை ஃபிளிக் செய்தார் பிரித்வி. பிரித்வி ஷா அதைத்தான் செய்வார் என்று அறிந்தே, ஷார்ட் ஸ்கொயர் லெக் திசையில் நிறுத்தப்பட்டிருந்தார் டாம் லேதம். அதேபோலவே பிரித்வி ஷா, அந்த திசையில் பந்தை அடிக்க, அதை அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் டாம் லேதம். பிரித்வி ஷா திறமையான பேட்ஸ்மேனாக இருந்தாலும், அனுபவமின்மையின் விளைவாக, நியூசிலாந்து அணி விரித்த வலையில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார் பிரித்வி ஷா.