கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும், ஆல்டைம் உலக லெவன் அல்லது தங்களது பார்வையில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஃபீல்டர்கள் என பல தேர்வுகளை செய்துவருகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி, டெஸ்ட், ஒருநாள் மற்றும்  டி20 கிரிக்கெட்டுகளின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டாம் மூடி, தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் ஆகிய இருவரும் டெஸ்ட்  மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள். இவர்கள் இருவரில் பெஸ்ட் என்று ஒருவரை மட்டும் தேர்வு செய்வது மிகக்கடினம். இருவருமே தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தக்கூடிய காலிஸ், ஒரு அருமையான பேக்கேஜ் என்று புகழ்ந்துள்ளார்.

ஜாக் காலிஸ், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சம அளவில் பங்களிப்பு செய்து, அதிகமான ரன்களை குவித்ததுடன், அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். தென்னாப்பிரிக்க அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,289 ரன்களை குவித்ததுடன், 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 328 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11,579 ரன்களை குவித்ததுடன், 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ராகுல் டிராவிட்டையும் ஜாகீர் கானையும் சேர்த்த கலவை என்று ஜாக் காலிஸை சொன்னால் மிகையாகாது. ஏனெனில் பேட்டிங்கில் ராகுல் டிராவிட்டின் ரன்களையும் பவுலிங்கில் ஜாகீர் கான் வீழ்த்திய விக்கெட்டுக்கு நிகரான பங்களிப்பை தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாக் காலிஸ் செய்திருக்கிறார்.

டெஸ்ட்  மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் மூன்றாவது சிறந்த ஆல்ரவுண்டராக பாகிஸ்தான் அணிக்கு 1992ல் உலக கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் இம்ரான் கானை தேர்வு செய்துள்ளார். நல்ல வேகத்தில் பந்துவீசக்கூடிய இம்ரான் கான், பேட்டிங்கில் 5,6,7 என பின்வரிசையில் களமிறங்கி 30 என்ற சராசரியை வைத்திருப்பதை வியந்து புகழ்ந்துள்ளார் டாம் மூடி. 

டி20 கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களாக, ஆண்ட்ரே ரசல், ஷேன் வாட்சன் மற்றும் ஷாகித் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.