இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் பதவிக்காக விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் தான் தற்போதிருக்கும் பயிற்சியாளர் குழுவின் கடைசி  தொடர். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர வாய்ப்பிருப்பதாகவும், இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே விண்ணப்பிக்கவுள்ளதாகவும் பல தகவல்கள் பரவிவருகின்றன. 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டாம் மூடி விலகினார். கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலக கோப்பையை வென்ற இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்த ட்ரெவர் பேலிஸ், சன்ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதே, அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடத்தான் என்று பேசப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாக பரவுகிறது. டாம் மூடி 2013ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை 7 ஐபிஎல் சீசன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 

1987 மற்றும் 1999 ஆகிய இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வென்றபோதும் அந்த அணிகளில் இடம்பெற்றிருந்தவர். டாம் மூடியின் பயிற்சியாளர் வாழ்க்கை வெற்றிகரமானதாகவே இருந்துள்ளது. அவர் வெற்றிகரமான பயிற்சியாளராகவே திகழ்ந்துள்ளார். இலங்கை அணிக்கு 2005ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுவரை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இலங்கை அணி 2007 உலக கோப்பையின் இறுதி போட்டிவரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.