இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக நடக்கும் இசை நிகழ்ச்சியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
கிரிக்கெட் உலகக் கோப்பையானது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடித்து வரலாற்றை மாற்றியமைப்போம் – பாபர் அசாம்!
கடந்த 5 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியானது எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக நடக்க இருந்த உலகக் கோப்பை தொடக்க விழாவானது ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டது. மாறாக, 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் மட்டுமே நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தான் உலகக் கோப்பை விழாவை, அக்டோபர் 14 ஆம் தேதி நடத்த இருப்பதாக ஐசிசி அறிவித்தது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக 14 ஆம் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக உலகக் கோப்பை விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஐசிசி ஏற்பாடுகள் செய்தது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், இந்த இசை நிகழ்ச்சியானது பிற்பகல் 12.30 மணிக்கு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இந்த இசை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியானது இசை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த இசை நிகழ்ச்சியானது ரசிகர்களுக்காக மட்டுமே நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
