இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு முதுகில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் 3ஆவது நாள் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை.

தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. முதள் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

பின்னர் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்ஃப்ராஸ் கான் 56, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தனர். கடைசியாக 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 473 ரன்கள் எடுத்தது.

பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் 3ஆம் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், குல்தீப் யாதவ் 30 ரன்னிலும், பும்ரா 20 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்கள் எடுத்து 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டாம் ஹார்ட்லி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா களத்திற்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் களத்திற்கு வந்தார். மேலும், துணை கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

ரோகித் சர்மா ஏன் வரவில்லை என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரோகித் சர்மாவிற்கு முதுகுபிடிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் பீல்டிங் செய்ய வரவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…