Asianet News TamilAsianet News Tamil

SA vs ENG: டெம்பா பவுமா அபார சதம்.. கடின இலக்கை கம்ஃபர்டபுளா அடித்து ODI தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 343 ரன்கள் என்ற கடினமான இலக்கை, டெம்பா பவுமாவின் அபார சதம் மற்றும் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால் கடைசி ஓவரில் அடித்து அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

temba bavuma century helps south africa to beat england in second odi and win series by 2 0
Author
First Published Jan 30, 2023, 2:11 PM IST

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வைன் பார்னெல், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

IND vs NZ: ஈசியான இலக்கை கஷ்டப்பட்டு அடித்து இந்தியா வெற்றி..!

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்ளி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களான ஜேசன் ராய்(9), டேவிட் மலான் (12), பென் டக்கெட் (20) ஆகிய மூவரும் சொதப்ப, அதன்பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், மொயின் அலி ஆகிய மூவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர்.

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் 75 பந்தில் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 51 ரன்கள் அடித்தார். நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர், 94 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தும் கூட, அவரால் சதமடிக்க முடியவில்லை. சாம் கரன் 17 பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி 28 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 342 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

343 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டெம்பா பவுமா - குயிண்டன் டி காக் இணைந்து அதிரடியாக ஆடி 12 ஓவரில் 77 ரன்கள் அடித்தனர். டி காக் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெம்பா பவுமா சதமடித்தார். 102 பந்தில் 109 ரன்களை குவித்து சாம் கரனின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார் பவுமா.

Womens U19 T20 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை

பவுமாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக பேட்டிங் ஆடிய வாண்டர்டசனும் 38 ரன்களுக்கு, பவுமா அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மார்க்ரம் 49 ரன்களும், ஹென்ரிச் கிளாசன்19 பந்தில் 27 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டேவிட் மில்லர் 37 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அவருடன் இணைந்து மார்கோ யான்சனும் 32 ரன்கள் பங்களிப்பு செய்ய, கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்து ஏமாற்றமளித்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios