Womens U19 T20 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி சாதனை
மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அண்டர்19 மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை முதல் முறையாக இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஃபைனல் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை
இந்திய அண்டர்19 மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா (கேப்டன்), ஷ்வேதா செராவத், சௌமியா திவாரி, கொங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ரிஷிதா பாசு, டைட்டஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாகவே அந்த அணியில் ரயானா 19 ரன்கள் மட்டுமே அடித்தார். அலெக்ஸா, சோஃபியா ஆகிய இருவரும் தலா 11 ரன்களும், மற்றொரு வீராங்கனை 10 ரன்னும் அடித்தனர். மற்ற அனைவருமே இரட்டை இலக்கத்தை கூட எட்டாமல் ஆட்டமிழக்க, 17.1 ஓவரில் வெறும் 68 ரன்களுக்கு இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பார்ஷவி சோப்ரா, டைட்டஸ் சாது மற்றும் அர்ச்சனா தேவி ஆகிய மூவருமே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
69 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் முறையாக நடத்தப்பட்ட அண்டர்19 மகளிர் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.