இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. அடுத்ததாக, இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

வரும் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கி நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்த தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து புள்ளி பட்டியலில் மேலே செல்லும் முனைப்பில் உள்ளது.

வரும் 4ம் தேதி இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிதான், ரோஹித்தின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட். அதுமட்டுமல்லாது விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியும் இதுதான்.

வரும் 4ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவார். சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் நீக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் பேட்டிங் ஆடிய 3 மற்றும் 5ம் இடங்களில் முறையே ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் இறங்குவார்கள்.

4ம் வரிசையில் வழக்கம்போலவே விராட் கோலி ஆடுவார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 6ம் வரிசையில் இறங்குவார். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக துணை கேப்டன் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்).