இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று மொஹாலியில் நடக்கவுள்ளது. 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டி கடந்த 15ம் தேதி தர்மசாலாவில் நடந்திருக்க வேண்டியது. ஆனால் கனமழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்தானது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று மொஹாலியில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. எஞ்சிய 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ஆடாததால் தவானுக்கு பதிலாக கேஎல் ராகுல் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் முதன்மையான தொடக்க ஜோடி ரோஹித் - தவான் தான். எனவே அந்தவகையில், ரோஹித்துடன் தவான் தான் தொடக்க வீரராக இறங்குவார். 

அடுத்ததாக கோலி, ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இறங்குவார்கள். ஜடேஜாவுடன் ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தரும் க்ருணல் பாண்டியாவும் இருப்பர். ஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனி, தீபக் சாஹர் இறங்குவார்கள். கலீல் அகமது இறக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை. 

2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி;

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 

டி20 அணியில் பேட்டிங் டெப்த்தை அதிகரிப்பதுதான் இந்திய அணியின் திட்டம். அதை கேப்டன் கோலியே கூறியிருந்தார். அந்தவகையில், மேற்கண்ட அணியில் நவ்தீப் சைனியை தவிர மற்ற 10 பேருமே பேட்டிங் ஆடுவார்கள்.