இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை 2-0 என வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் மாற்று தொடக்க வீரரான ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. தவான் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், தவான் மீண்டும் உத்வேகம் பெற, அவருக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. எனவே தவான் கண்டிப்பாக ஆடுவார் என்பதால் ரோஹித் - தவான் தொடக்க ஜோடியில் மாற்றம் இருக்காது.

ராயுடுவும் அதேபோலதான். ராயுடு உலக கோப்பைக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவரும் ஒரு சிறந்த இன்னிங்ஸை ஆடுவது அவசியம். அந்த வகையில் அவரும் அணியில் இருப்பார். விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோரும் ஆடும் லெவனில் இருப்பர்.

முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் அணிக்கு திரும்புவதால் அவர் ஆடும் லெவனில் இருப்பார். ஷமி சிறப்பாக வீசிவருகிறார். அதனால் அவரை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு இந்த போட்டியில் ஓய்வளித்துவிட்டு புவனேஷ்வர் குமார் - பும்ரா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா.