ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. மே 30 முதல் ஜூலை 14ம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடக்கிறது. 

இங்கிலாந்தில் நடக்கும் இந்த உலக கோப்பையை இந்த முறை இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய இரண்டில் ஒரு அணி தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கருத்தைத்தான் பல முன்னாள் ஜாம்பவான்களும் கூறியுள்ளனர். 

கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் வலுவாக இருப்பதுடன் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடிவருகிறது. இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டு முறை ஒருநாள் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி இதுவரை ஒருமுறை கூட ஒருநாள் உலக கோப்பையை வென்றதில்லை.

எனவே முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து அணிக்கு, உலக கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடப்பது கூடுதல் பலம். அதேவேளையில், கோலி தலைமையிலான இந்திய அணி, உலகின் வலுவான அணியாக இருந்துவருகிறது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் இந்திய அணி இருக்கிறது. 

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோனி, கோலி, ரஹானே, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். ஓப்போ செல்போன் நிறுவனம் ஸ்பான்சர் செய்யும் இந்த புதிய ஜெர்சியில் சிறியளவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிறம் மற்றும் டிசைனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் காலர் பகுதியில் இந்திய அணியின் உலக கோப்பை வெற்றிகளை பறைசாற்றும் வகையில் 1983, 2011 ஒருநாள் உலக கோப்பை வெற்றிகள் மற்றும் 2007 டி20 உலக கோப்பை வெற்றி ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.