உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. 

அரையிறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியில் 96 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியை ஜடேஜாவும் தோனியும்தான் காப்பாற்றினர். அபாரமாக ஆடிய ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்ததும் முழு பொறுப்பும் தோனியின் தோள்மீது விழுந்தது. 

இதுபோன்ற பல போட்டிகளை தோனி வெற்றி பெற்று கொடுத்திருந்ததால் தோனி மீது அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் அதீத நம்பிக்கை இருந்தது. ஆனால் தோனி 49வது ஓவரில் ரன் அவுட்டாகிவிட்டார். அந்த போட்டியில் தோற்றதற்கு தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காமல் ஏழாம் வரிசையில் இறக்கியதுதான் மிகப்பெரிய காரணம். பேட்டிங் ஆர்டரை மாற்றியதுதான் முக்கியமான காரணம். 

ஆனாலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொடங்கி கேப்டன் கோலி வரை அனைவருமே அந்த உத்தியை நியாயப்படுத்தும் விதமாகவே பேசிவிட்டு சென்றனர். இந்நிலையில், அரையிறுதியில் தோற்றதற்கு பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஒரு காரணத்தை கூறியுள்ளார். தோல்விக்கு வீரர்கள் யாரும் காரணமில்லை. இந்திய அணி நன்றாகவே ஆடியது. ஆனால் போட்டி மழை காரணமாக இரண்டாம் நாள் ஆடபட்டதுதான் முக்கிய காரணம். மழை காரணமாக இரண்டாம் நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறிவிட்டது. அதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று பரத் அருண் கூறியுள்ளார்.